நீ யார் என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள்.
யார் என்பதே எனது பெயர்.
இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள்.
யார் என்று யாராவது பெயர் வைப்பார்களா என்கிறார்கள்.
எனது கடவுச்சீட்டையும்கூடக் காண்பித்து விட்டேன்.
எப்படி எனும் தந்தைக்கும் ஏன் எனும் தாய்க்கும் பிறந்த
மூத்த மகன் தான் நான் என்கிறது கடவுச்சீட்டு.
என்னை யாரும் நம்பாவிட்டால் பரவாயில்லை.
என் பெயர் யார் என்பதுதான்.
மகிழ்ச்சிக்காக நட்சத்திரங்களைப் பிடித்துக்
கடலில் போட்டுக் கலக்கிக் குடிக்கிறேன்.
சூறாவளி அலைகள் எழும் கடலில் பாய்ந்து
பாய்போல் சுருளும் அலைகளுக்கிடையே உலாவுகிறேன்.
நான் பேசும் வார்த்தைகளை வைத்து
என்னை எடை போடும் நீங்கள்
நான் மனதிற்குள் பூட்டி வைத்தவற்றை
ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை?
நான் போன பிறகும்
நட்சத்திரங்களும், நிலாவும், சூரியனும், கடலும், காற்றும்
தொடர்ந்து இருந்து விட்டுத்தான் போகட்டுமே.
நான் போகப் போவது என்னவோ உறுதி.
சரி என்னைக் கேட்டது இருக்கட்டும்
முதலில் உன்னைக் கேட்கிறேன்.
நீ யார்?
— 22-செப்டம்பர் 2020