ஓவியக் கலையின் கலை விமர்சகனாக TIMES OF INDIA, THE ECONOMICS TIMES, INDIAN EXPRESS ஆகியவற்றில் எழுதியதின் காரணமாக எக்ஸ்பிரஷனிசம் பற்றி ஒரு கால கட்டத்தில் அதிகம் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஓவியங்களில் பலர் செய்த பரிசோதனைகளைக் கவிதையில் செய்து பார்க்கத் தொடங்கினேன்.
காண்டின்ஸ்கி, மன்ச், பெக்மேன் ஆகிய ஓவியர்களைக் கடந்து 1990ல் மெல்ல நகர்ந்து ஜெர்மானிய எக்ஸ்பிரனிச கவிதைகள் குறித்துத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தபோதுதான் எனது கவிதையில் புதிய திறப்புகள் தோன்றின. குறிப்பாக ஜெர்மானிய எக்ஸ்பிரஷனிச கவிகளான ஜியார்ஜ் ஹைம், எர்னஸ்ட் ஸ்டேட்லர், செக் மொழிக் கவிஞர் ப்ரான்ஸ் வெர்ஃபெல் ஆகியோரின் கவிதைகளில் காணப்பட்ட நகர அனுபவம் சார்ந்த கவிதைகளைப் பார்த்தேன். இவர்கள் இன்றுவரை தமிழில் அறிமுகப்படுத்தப்படவேயில்லை. நான் சென்னை , புதுவை, மும்பை நகர வாழ்வின் அனுபவங்களை எனது பார்வையில் பரிசீலித்து எழுதத் தொடங்கினேன். இதைக் கவனித்த சுஜாதா கணையாழி கடைசி பக்கத்தில் “ இந்திரன் கவிதைகள் தமிழுக்குப் புதிய பரிமாண விஸ்தீரணம் “என்று எழுதினார்.
நகரம் என்பதை ஒரு நரகமாகத் தமிழ்க் கவிஞர்கள் நினைத்தபோது நான் நகரத்தைப் பாசகமாக அணுகி என் கவிதைகளை எழுதினேன். ”சேரி சாக்கடியில் விழுந்தது நிலா” ( முப்பட்டை நகரம் 1991) , ”சோடியம் விளக்குகளின் மஞ்சளில் நனைந்த மனிதர்கள்” “ பொய் சொல்லும் பெட்டியின் மீதிருந்த பிளாஸ்டிக் பூக்கள் அது சொன்ன பொய்களால் வாடிப் போயின” போன்ற வரிகளை எழுதுவதற்குக் காரணம் ஜெர்மானிய எஸ்பிரஷனிசம் என் மீது ஏற்படுத்திய தாக்கம்தான். எனது கவிதைகளில் புதிய திசை மாற்றங்களை 90களில் ஏற்படுத்தக் காரணம் ஜெர்மானிய எக்ஸ்பிரஷனிசம். இதற்கு மாக்ஸ்முல்லர்
பவன் நூலகம் முக்கிய காரணம்.